டெஹ்ரான்: இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் பெரும் சேதமடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதி செய்துள்ளது. காசாவை ஆதரித்து வரும் ஹமாஸ் அமைப்புக்கு உதவுகிறது என்ற காரணத்தால் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அணுசக்தி மையங்கள், ராணுவ தலைமையகங்கள் போன்ற முக்கிய இடங்கள் தொடர்ச்சியாக குறிவைக்கப்படுகின்றன.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி அளித்து வரும் ஈரான், இந்தப் போர் விரிவடைய இஸ்ரேல் திட்டமிடுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் நடந்த தாக்குதல்களில் 244 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,200 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும் ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட தகவலின்படி, தெற்கு டெஹ்ரானிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று நிலையம் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் தாக்குதலிலிருந்து தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், யுரேனியம் இருப்புத்தொகையும் குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறவிருக்கின்றன. மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நிலைமை உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.