டெல் அவிவ்: ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை கடின நீர் ஆலையை இஸ்ரேல் தாக்கியதை அடுத்து, நேற்று ஒரு பெரிய இஸ்ரேலிய மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. ஈரானிய நகரமான அராக் நகரில் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் கடின நீர் உற்பத்தி ஆலை உள்ளது. தாக்குதல் காரணமாக அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்திருந்தது.
இந்த சூழ்நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று காலை அராக் நகரில் உள்ள கடின நீர் ஆலை மீது குண்டு வீசின. ஈரான் ஏற்கனவே ஆலையை காலி செய்திருந்தது. இதனால் இங்கு அதிக சேதம் ஏற்படவில்லை. கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் இல்லை. இஸ்ரேலிய இராணுவம், “அணு ஆயுத உற்பத்திக்கு அணு உலைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நாங்கள் இங்கு தாக்குதலை நடத்தினோம். ஈரானின் நடன்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு அணு மின் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினோம்” என்று கூறியது. பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் நேற்று தெற்கு இஸ்ரேலில் உள்ள சொரோகா மருத்துவ மையத்தின் மீது ஏவுகணைகளை வீசியது.

இந்த மருத்துவமனை 1,000 படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவமனையாக செயல்பட்டு வந்தது. ஏவுகணை தாக்குதலில் மருத்துவமனையின் பல பகுதிகள் சேதமடைந்தன. பலர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றனர். கடுமையான சேதம் காரணமாக மருத்துவமனை நேற்று மூடப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களைத் தவிர மற்ற நோயாளிகள் இங்கு வரக்கூடாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் மருத்துவமனை மீதான தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலில் உள்ள பல மருத்துவமனைகள் தாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் அடித்தள வாகன நிறுத்துமிடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “ஈரானின் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் இந்த தாக்குதலுக்கு பெரும் விலை கொடுப்பார்கள்” என்று அவர் கூறினார்.