டெஹ்ரான்: ஈரானை தாக்கிய குற்றத்திற்கு இஸ்ரேல் கடுமையான தண்டனையை எதிர்பார்க்க வேண்டும் என உயரிய தலைவர் அயதுல்லா கமெனி கூறியுள்ளார். இஸ்ரேலின் செயல்கள் மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அதற்கான பழி நிச்சயம் வாங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று டெஹ்ரான், ஷிராஜ், தப்ரிஜ் ஆகிய நகரங்கள் மற்றும் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரி ஹூசைன் சலாமி மற்றும் இராணுவத் தலைவர் ஜெனரல் முகமது பகேரி உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏவுகணை திட்ட தலைவர் அலி ஹஜிஜதேஹாவும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இவ்விதமான அதிரடி தாக்குதலுக்குப் பதிலாக, ஈரான் 100 ட்ரோன்களை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளது. இது பெரும் பதிலடி நடவடிக்கையாக கருதப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானில் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் கூறுகையில், இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து அமைதியாக இருக்க மாட்டோம். அந்த நாட்டின் முட்டாள்தனமான செயலுக்காக கடுமையான பதிலடி கொடுக்கப்படும். நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் அரசுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அயதுல்லா கமெனி தனது உரையில், ஈரான் மீது மேற்கொண்ட இந்த தாக்குதல் மிகப் பெரிய தவறு. இது ஒரு நாட்டு வரலாற்றில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வாகும் என்றும், இஸ்ரேல் தண்டனை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்போது, மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் மிகுந்ததாக உள்ளதால், இந்த விவகாரம் ஒரு பெரிய மோதலாக மாறும் அபாயம் உள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையேயான நிலைமை மேலும் தீவிரமடைவதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகின்றன.