ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அந்த முடிவை இந்தியா ஏற்றால் அதன் விளைவுகள் கடுமையானவை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 64 டாலராக உள்ளது. ஆனால் இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் விலை 120 டாலருக்கு மேலே ஏறும். இது உலகளாவிய விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும்.

இது மட்டும் அல்லாது, அனைத்து நாடுகளும் ரஷ்யா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் பீப்பாய் விலை 200 டாலரை எட்டும். இதில் முதல் பாதிப்பை சந்திப்பவர்கள் ஏழை நாடுகள் மற்றும் பொதுமக்கள் ஆக இருக்கிறார்கள். ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐநா உள்ளிட்ட அமைப்புகள் ரஷ்யா எண்ணெய்க்கு தடை விதிக்கவில்லை என்பதும் உண்மை.
இந்தியா தற்போது ரஷ்யாவிடம் 36 சதவீதம் எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உதவியுள்ளது. முன்னதாக ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கிய இந்தியா, அமெரிக்க தடைகளை மதித்து அதை நிறுத்தியது. ஆனால் சீனா இன்னும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை டிரம்ப் கண்டுகொள்ளவில்லை.
ரஷ்யா எண்ணெய்க்கு தடை விதிக்கப்படவில்லை என்றாலும், இந்தியா மீது வரி விதித்து அமெரிக்கா அழுத்தம் தரும் முயற்சி செய்துவருகிறது. ஆனால் இந்திய அரசு நாட்டின் நலனுக்காக உறுதியாக தன்னம்பிக்கையுடன் நிலைத்திருக்கிறது. இது சரியான நிலைப்பாடாகும் என உலக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் டிரம்பின் இரட்டை நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்கா ரஷ்யாவிடம் யுரேனியம், உரம் போன்றவை வாங்கும் நிலையில், இந்தியா எண்ணெய் வாங்குவதை எதிர்ப்பது தார்மீக சீர்கேடாக இருக்கிறது. இந்தியாவின் தைரியமான நிலைப்பாட்டை பல்வேறு நாடுகள் பாராட்டுகின்றன.