டெஹ்ரான்: இன்று காலை ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்குப் பிறகு, இரவு நேரத்திலும் ட்ரோன் மூலம் மீண்டும் தாக்குதல் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்குப் பிறகு ஈரான் முழுவதும் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தெஹ்ரானின் தெற்கு பகுதியில் பறந்த இஸ்ரேலின் ட்ரோன்களை ஈரான் பாதுகாப்பு அமைப்புகள் அழித்ததாக தகவல்கள் கூறுகின்றன. பார்டவ் அணுசக்தி நிலையம் அருகேயும் ட்ரோன் தாக்குதலை ஈரான் தடுப்பதில் வெற்றி பெற்றது. இஸ்ரேலின் புதிய தாக்குதல் காராஜ் என்ற நகரை குறிவைத்ததாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட தகவலில், ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் இயக்கப்படும் மையங்களை குறிவைத்து தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் நிலையை மேலும் சிக்கலாக்கும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இதுகுறித்து தெரிவித்த பேட்டியில், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஈரானிடம் அணுசக்தி திட்டங்கள் மீதான தகவல்கள் தெளிவாக இல்லை என கூறியுள்ளார். ஆனால், ஈரானுக்கு அணு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு இன்னும் கால அவகாசம் தரப்பட வேண்டும் எனவும், மனிதாபிமான அடிப்படையில் அவர் முயற்சி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ அளித்த பேட்டியில், இஸ்ரேலின் தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து அமெரிக்காவிடம் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், அமெரிக்காவின் ஆதரவு அவர்களது முடிவுக்கு ஏற்ப அமையும் எனவும் கூறினார். தற்போது முக்கிய குறிக்கோள், ஈரானின் ஏவுகணை உற்பத்தி மையங்களை அழிக்கவேண்டும் என்பதுதான் என அவர் வலியுறுத்தினார்.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இழப்புகளை குறைக்கும் வழிகளை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அமெரிக்கா தங்கள் ராணுவத்தை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ளது. மத்திய தரைகடலின் மேற்கு பகுதியில் இருந்த தாமஸ் ஹண்டர் என்ற பெயருள்ள போர்க்கப்பல் கிழக்கை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் பாலிஸ்டிக் ஏவுகணைகளை அழிக்கக்கூடிய திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் மற்றும் பதிலடி நடவடிக்கைகள், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சிக்கலான நிலையை மேலும் தீவிரப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன.