தோஹா: ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசா மையமாக செயல்படும் ஹமாஸ் அமைப்பை அழிக்க இஸ்ரேல் தொடர்ந்து தரை வழி மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாக கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கத்தார் அதிகாரிகள் இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய நிலையில், அதில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

ஹமாஸ் தரப்பில், தங்களின் அமைப்பு உறுப்பினர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கத்தாரில் நிகழ்ந்த தாக்குதல், அப்பாவி உயிரிழப்புகளால் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி நடந்த தாக்குதலுக்கும், அண்மையில் ஜெருசலேமில் ஆறு பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் பதிலடி என்ற வகையில் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
அதே நேரத்தில், தாக்குதலுக்குப் பிறகே அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததாக கத்தார் பிரதமர் ஷெய்க் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி குற்றம் சாட்டினார். இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான மோதலில் முக்கிய மத்தியஸ்தராக இருந்த கத்தார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச சட்டங்களை மீறி தாக்குதல் நடத்தப்பட்டதாக பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் நல்ல சூழ்நிலை அல்ல என்றும், பிராந்திய அமைதி மேலும் சிதைவடையக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார். கத்தார் சம்பவம், மேற்காசிய அரசியல் சமநிலையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதால், உலக நாடுகள் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதே அடுத்த கட்ட முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.