புதுடில்லியில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த இஸ்ரேல் நிதியமைச்சர் பெலேல் ஸ்மோட்ரிக், பயங்கரவாதத்தை எதிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா-இஸ்ரேல் இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ஜெருசலேமில் பஸ்சில் நடந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததை அவர் குறிப்பிட்டார்.

அந்த சம்பவம், காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையும், 2023 அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய இஸ்ரேல் தாக்குதலையும் நினைவூட்டுவதாக அவர் கூறினார். அப்போது 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது, உலகம் முழுவதும் பரவியிருக்கும் தீய சக்திகள் மனித சமுதாயத்தின் அமைதிக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதை மீண்டும் உணர்த்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பெலேல் ஸ்மோட்ரிக், ஜனநாயகம், மத சுதந்திரம், பேச்சுரிமை ஆகியவற்றை காக்கும் பொறுப்பு அனைத்துநாடுகளுக்கும் இருப்பதாக கூறினார். உலகத்தின் எந்தப் பகுதியில் நடந்தாலும், அந்த பயங்கரவாத தாக்குதல் மறுநாள் வேறு நாட்டை தாக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் உலகம் ஒன்றிணைந்து செயலில் இறங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையிலான இந்த சந்திப்பு, பொருளாதார முதலீட்டுடன் மட்டுமல்லாமல், பாதுகாப்புத் துறையிலும் இருநாடுகளின் உறவை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. பயங்கரவாதம் என்பது எந்த ஒரு நாட்டின் பிரச்சினையுமல்ல, உலகத்தின் அனைவரையும் பாதிக்கும் மனிதாபிமான சவாலாகும் என்பதையும் இஸ்ரேல் அமைச்சர் வலியுறுத்தினார்.