ஜெருசலேம்: ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.
இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணைகள் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்நிலையில், ஏமன் மீது இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனாவில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. அதேபோல், ஏமனின் ஹுடைடா துறைமுகம் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்தனர்.