வாஷிங்டன்: போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து செயல்படுவோம்,’ என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார் ஒரு சமூக ஊடகப் பதிவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “காசா தொடர்பாக எனது பிரதிநிதிகள் இன்று இஸ்ரேலியர்களுடன் ஒரு பயனுள்ள சந்திப்பை நடத்தினர். காசாவில் 60 நாள் போர் நிறுத்தத்தை இறுதி செய்வதற்குத் தேவையான விதிமுறைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து தரப்பினருடனும் நாங்கள் இணைந்து செயல்படுவோம். யுத்த நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் எகிப்து, இதற்கான இறுதித் திட்டத்தை வழங்கும். மத்திய கிழக்கின் நன்மைக்காக ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில், நிலைமை சிறப்பாக மாறாது, அது மோசமாகிவிடும்.”

ஹமாஸை போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அவர் எச்சரித்தார். காசா போர் நிறுத்தம், ஈரான் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து இஸ்ரேலிய அமைச்சர் ரான் டெர்மர் நேற்று வாஷிங்டனில் அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சேவ் தி சில்ட்ரன், அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ஆக்ஸ்பாம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட உதவி குழுக்கள், உணவுக்காக உதவி முகாம்களுக்கு வரும் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கொடிய வன்முறைகளுக்கு மத்தியில், காசாவில் அமெரிக்க ஆதரவுடன் இயங்கும் உதவி விநியோக முறையை இஸ்ரேல் அகற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன.
சமீபத்திய நாட்களில் உணவுக்காகக் காத்திருந்த பல பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பரவலான சர்வதேச விமர்சனங்களை ஈர்த்துள்ளது.