ஜெருசலேம்: 2023 அக்டோபரில் காசா மீது போரைத் தொடங்கிய இஸ்ரேல், கடந்த மூன்று நாட்களில் ஹமாஸ் ஆதரவு பெற்ற பல நாடுகளை குறிவைத்து அதிரடி தாக்குதலை நடத்தியது. செப்டம்பர் 8 முதல் 10 வரை 72 மணி நேரத்தில் ஆறு நாடுகள் தாக்குதலுக்குள்ளானது உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காசாவில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டனர்; உயரமான கட்டிடங்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகள் இடிக்கப்பட்டன. லெபனானில் ஹெஸ்பொல்லா ஆயுத கிடங்குகள் இலக்காகக் கொள்ளப்பட்டன. சிரியாவில் ஹோம்ஸ் விமானப்படை தளம் மற்றும் லடாக்கியா அருகே ராணுவ கட்டடம் அழிக்கப்பட்டது. துனீஷிய துறைமுகத்தை அடைந்த இத்தாலிய கப்பலை ட்ரோன் மூலம் தாக்கியது. கத்தாரின் தோஹாவில் ஹமாஸ் அலுவலகம் தாக்கப்பட்டதில் முக்கிய தலைவரின் மகன் உட்பட ஆறு பேர் பலியானார்கள். ஏமனின் சனாவில் குடியிருப்பு, அரசு கட்டடங்கள், மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தாக்குதலால் 35 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் அதனை ஆதரிக்கும் நாடுகளை முற்றிலும் சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இதனால் மேற்கு ஆசியா மீண்டும் ரத்தக் களமாக மாறியுள்ளது. அமெரிக்கா, குறிப்பாக கத்தார் மீதான தாக்குதலை கடுமையாக விமர்சித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப், “இது புத்திசாலித்தனமான செயல் அல்ல; இப்படி நடந்தால் அமெரிக்கா இனி உங்களை ஆதரிக்காது” என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் முன்னெடுத்த இந்த 72 மணி நேர போராட்டம், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. உலக அரசியலில் அடுத்த கட்ட மாற்றங்களுக்கு இது வழிவகுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.