மாட்ரிட்: ஸ்பெயினில் உள்ள தொழில்முறை கால்பந்து கிளப்புகளின் நிர்வாக அமைப்பான லா லிகா மற்றும் அதன் கிளப்புகள் நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டி வருகின்றன. ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 158 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் வலென்சியா பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், செஞ்சிலுவை சங்கத்துக்கு ஆதரவாக நிதி திரட்டும் பணியில் லா லிகா மற்றும் அதன் கிளப் அணிகள் முடுக்கிவிட்டன. நிதி திரட்டுவதற்காக போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போது சமூக ஊடகங்களில் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தவும் லா லிகா முடிவு செய்துள்ளது.
“இந்த சோகத்தில் ஸ்பெயினின் தொழில்முறை கால்பந்து அமைப்பும் இணைகிறது. “பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று லா லிகா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்வதாக ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அறிவித்துள்ளது.
கிளப் ஒரு மில்லியன் யூரோக்களை நன்கொடையாக அறிவித்தது. இதை ரியல் மாட்ரிட் ஒரு அறிக்கையில் உறுதி செய்துள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கழக அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மழையால் ரத்து செய்யப்பட்ட போட்டிகள் வேறொரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.