நைரோபி: கென்யாவில் கனமழை காரணமாக கிழக்கு மரக்வெட் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு 21 பேர் பலியாகி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கென்யா. அந்நாட்டின் ரிப்ட் வெலி மாகாணத்தில் உள்ள மரக்வெட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக அம்மாவட்டத்தின் கிழக்கு மரக்வெட் பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் மாயமாகினர். அதேபோல், 25 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த 25 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மாயமான 30 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது