இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பான பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ஒரு கிளையான டிஆர்எஃப்-ஐ அமெரிக்க அரசு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இதை இந்தியா வரவேற்றுள்ளது. பாகிஸ்தான் இதை மறுத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்து கொண்ட தகவல்களைப் பார்ப்போம்.
“பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட மற்றும் செயலிழந்த அமைப்பாகும். பாகிஸ்தான் அரசு அந்த வேலையை கவனமாகச் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதன் உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் பாகிஸ்தான் உலகத் தலைவராக உள்ளது. உலக அமைதிக்காக பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலில் லஷ்கர் ஈடுபட்டதாகக் கூறுவதற்கு இந்தியாவில் எந்த ஆதாரமும் இல்லை. உலகளவில் பாகிஸ்தானை களங்கப்படுத்தும் நோக்கில் இந்தியா செயல்படுகிறது. இதன் மூலம், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்தியா முயற்சிக்கிறது,” என கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுத்துறை தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும் (எப்டிஓ) நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாத அமைப்பாகவும் (DGTO) நியமிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி வழங்குவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அழைப்பை செயல்படுத்துவதற்கும் அமெரிக்க நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது” என்று கூறினார்.
அமெரிக்க அரசாங்கம் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) ஐ ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக நியமித்ததை இந்தியா வரவேற்றது. சீனாவின் கருத்து: பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளை மேம்படுத்தவும், பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கூட்டாகப் பராமரிக்கவும் சீனா பிராந்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.