ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார், இறந்துவிட்டதாகவும், படுத்த படுக்கையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகக் கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் ஜனவரி 1 முதல் நேற்று வரை நடந்த தொடர் பயங்கரவாதச் சம்பவங்களில் ராணுவ மேஜர் உட்பட 12 வீரர்கள் மற்றும் 10 பொதுமக்கள் உயிரிழந்தனர்; 55 பேர் காயமடைந்தனர்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் உள்ளூர் பயங்கரவாத அமைப்புகளின் போர்வையில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டிருக்கலாம் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது. அதன் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்தது.
அவர் பாகிஸ்தான் சிறை மருத்துவமனையில் படுத்திருப்பதாகவும், குண்டுவெடிப்பில் அவர் இறந்துவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பாகிஸ்தானின் பவல்பூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்று தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஆதரவாக அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அதை மசூத் அசாரின் பழைய ஆடியோவுடன் ஒப்பிட்டு நம் நாட்டு தனியார் தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காக பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவால் கிரேலிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அப்பட்டியலில் இருந்து 2022ல் தான் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக வெளியான தகவல் அந்நாட்டு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.