பியாங்யாங்: கிழக்கு கடல் பகுதியில் வடகொரியா ஏவுகணை வீசி சோதனை நடத்தியது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில் வட கொரியா இன்று கிழக்கு கடல் பகுதியில் ஏவுகணையை செலுத்தியது. இதை தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள நீரில் இறங்குவதற்கு முன் 1,100 கிலோமீட்டர் (685 மைல்) தூரம் ஏவுகணை பறந்ததாகவும் தெரிவித்தது.
வட கொரிய தலைநகரான பியாங்யாங்கிற்கு அருகில் உள்ள பகுதியில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அமெரிக்கா மற்றும் தென் கொரிய ராணுவத்தினரால் ஏவுகணை ஏற்பாடுகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டதாகவும் தெற்கின் கூட்டுப் படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.