வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை, இருநாட்டு உறவுகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க மக்களையும் நேரடியாக காயப்படுத்தும் என்று ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சீனாவைப் போல அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு வரி விதிக்காமல், இந்தியாவை மட்டும் குறிவைத்தது நியாயமற்றது என அவர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க பார்லிமென்டில் வெளியுறவுக் கொள்கைக்கான குழுவில் நடைபெற்ற விவாதத்திலும் அதிபரின் முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் பதிவிட்டு, “20 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட உறவை சிதைக்கிறது. இது அமெரிக்காவுக்கே எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
பல பொருளாதார, வெளியுறவு நிபுணர்களும் இதே கருத்தையே முன்வைத்துள்ளனர். இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது அமெரிக்காவின் நம்பகத்தன்மையை பாதிப்பதோடு, அந்நாட்டின் நுகர்வோருக்கும் அதிக சுமையை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளனர்.