புதுடெல்லி/சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். சிங்கப்பூர் இறைமைச் செல்வ நிதியான டெமாசெக் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜிஐசி, டிபிஎஸ் குரூப், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், செம்ப்கார்ப், சங்கி விமான நிலையம், சிங்டெல், எஸ்ஜிசி, கேபிடல் லேண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
எனது மூன்றாவது ஆட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் வளர்ச்சியும் வேகமும் மேலும் அதிகரிக்கும். இதனால், ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, தொழில் பூங்காக்கள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு ஆகியவற்றில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை முன்னறிவிப்பு மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான சீர்திருத்தங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன.
திறமையான பணியாளர்கள், விரிவான சந்தை வாய்ப்பு, உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு 17 சதவீதம் பங்களிக்கும் இந்தியாவில் முதலீடு ஆகியவை எதிர்கால வளர்ச்சிக்கு அடிப்படை. விமானச் சந்தை பரந்த வானம் போன்ற முதலீட்டு வாய்ப்புகள் நிறைந்தது.
சாதாரண ஸ்கிராப்பிங் தொழில் கூட சிறந்த முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது. குறிப்பாக, பழைய அரசு வாகனங்கள் அனைத்தையும் அழிக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள தொழில்முனைவோர்களுக்கான முதலீட்டு நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் இன்வெஸ்ட் இந்தியா அலுவலகம் இங்கு திறக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். சிங்கப்பூரின் முதலீட்டு நிதி, உள்கட்டமைப்பு, உற்பத்தி, எரிசக்தி, தளவாடங்கள் உள்ளிட்ட துறைகளின் சிஇஓக்கள் நேற்று பிரதமர் மோடியுடன் வட்டமேசை விவாதத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.5 லட்சம் கோடி (60 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீடு செய்யப் போவதாக பிரதமர் மோடிக்கு அவர்கள் உறுதியளித்தனர்.