வாடிகன்: நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி… வாடிகனில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க மத தலைவர் போப் பிரான்சிஸ் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கத்தோலிக்க மத தலைவரான போப் பிரான்சிஸ் திங்களன்று உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பின்னர் நேற்று முன்தினம் அவரது உடல் வாடிகனில் உள்ள புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடந்த இரண்டு நாட்களாக செயின்ட் பீட்டர்ஸ் பேராலயம் நள்ளிரவும் திறந்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை தூய்மைப்படுத்துவதற்காக சுமார் ஒரு மணி நேரம் மட்டுமே பசிலிக்கா மூடப்பட்டது. மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வாடிகன் வந்துள்ளனர்.
பல மணி நேரம் காத்திருந்து அவர்கள் போப்பிற்கு அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மூன்று நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்படும். அவரது இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் ரோம் வருகிறார்கள். போப் விருப்பப்படி மடோனா ஜகானுக்கு அருகில் செயின்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் போப் உடல் அடக்கம் செய்யப்படும்.