ஜெட்டா: பிரதமர் மோடியின் விமானம் நேற்று சவுதி அரேபிய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து வழியனுப்பி வைத்தன. பிரதமர் மோடியின் வருகைக்கு அளிக்கப்பட்ட இந்த அரிய சிறப்பு மரியாதை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பிரதமர் மோடியை அந்நாட்டின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் சவூதி அரேபியாவுக்கு அழைத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார்.
வெளிநாட்டு தலைவர்கள் வருகையின் போது, விமான நிலையத்தில் அந்நாட்டு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம். பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், சவுதி போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து, ஜெட்டா நகருக்கு அழைத்துச் சென்றன. சவுதி அரேபியாவின் நெருங்கிய நட்பு நாடு என்பதால், பிரதமர் மோடிக்கு இந்த அரிய சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இதற்கு முன்பு 2016 மற்றும் 2019-ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றுள்ளார்.இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையேயான இருதரப்பு சந்திப்பு பிரதமர் மோடி மற்றும் சவுதி பட்டத்து இளவரசர் தலைமையில் நடக்கிறது. பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும். விண்வெளி, ஆற்றல், சுகாதாரம், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உயர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு தரப்புக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
சவுதி அரேபியா பயணத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:- சவுதி அரேபியா, இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களில் ஒன்று. இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு அபரிமிதமான ஆற்றலைக் கொண்டுள்ளது. அதை மேலும் வலுப்படுத்த விரும்பும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தொலைநோக்கு பார்வை கொண்டவர். விஷன் 2030 என்ற தலைப்பில் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் உலக அளவில் பாராட்டைப் பெற்றுள்ளன.
சவுதி இளவரசரை நான் சந்திக்கும் போதெல்லாம், அவர் என் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார். அவரது அறிவு, முற்போக்கு சிந்தனை மற்றும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் ஆர்வம் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவை. சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவு குறித்து நான் பெருமைப்படுகிறேன். எங்கள் உறவுகள் புதியவை அல்ல. இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்றம் பல நூற்றாண்டுகள் பழமையானது.
அனைத்து துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால உறவு உள்ளது. 2023-ல் டெல்லியில் அறிவிக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வர்த்தக பாதை (IMEEC), வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் இணைப்பை வழங்கும். முழு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த நடைபாதை ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.