சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பங்கேற்று உரையாற்றினார். இவ்வுரையில் அவர், ரஷ்யாவும் சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளதாக வலியுறுத்தினார். பிரிக்ஸ் அமைப்பு உலகளாவிய அளவில் முக்கியத்துவம் பெறும் அமைப்பாக இருப்பதோடு, உலக நிதி நிறுவனங்களில் சீர்திருத்தங்களை ஆதரிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புடின் தனது உரையில், சீனாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பில் ரஷ்யா செயல்படுகின்றது என தெரிவித்தார். உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளில், சர்வதேச பாதுகாப்பு தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொள்வதில், பொருளாதார வளர்ச்சியை தடுக்கின்ற அநீதி நிறைந்த தடைகளுக்கு எதிராக பொதுவான நிலைப்பாட்டை எடுப்பதில், பிரிக்ஸ் நாடுகளின் திறனை வலுப்படுத்துவது மிக அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சீர்திருத்தங்களையும் ரஷ்யா ஆதரிக்கின்றது என புடின் தெரிவித்தார். இந்த சீர்திருத்தங்கள் உலகின் அனைத்து மக்களுக்கும் நன்மை தரும் என்பதில் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம், மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக பிரிக்ஸ் அமைப்பு உறுதியாக செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
புடினின் இந்த அறிக்கை, சீனாவுடன் ரஷ்யாவின் நெருக்கமான தொடர்பையும், பிரிக்ஸ் அமைப்பின் எதிர்கால பங்கையும் வெளிப்படுத்துகிறது. உலக அரங்கில் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதில், பிரிக்ஸ் நாடுகள் புதிய பொருளாதார மற்றும் அரசியல் சமநிலையை உருவாக்கும் சக்தியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இது, உலகளாவிய அதிகார அமைப்பில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் கருதப்படுகிறது.