நியூயார்க்: பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு காண வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்துக்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் எதிராக வாக்களித்தன.
2023 முதல் இஸ்ரேல்–ஹமாஸ் போர் தொடர்ந்துவரும் நிலையில், காசாவில் 64,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனமும் இஸ்ரேலும் தனித்தனி நாடுகளாக இருக்க வேண்டும் என்ற இரு நாடு திட்டத்தையும், அமைதியான தீர்வையும் வலியுறுத்தும் வகையில் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. மொத்தம் 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. எதிர்ப்புக் குழுவில் அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் இருந்தன.
இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பாலஸ்தீனம் என்னும் நாடு இனி ஒருபோதும் உருவாகாது; அந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது” என்று உறுதியாகக் கூறியதால் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. வரும் செப்டம்பர் 22 அன்று நடைபெறவுள்ள ஐ.நா. உச்சி மாநாட்டில் இந்த விவகாரம் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.