மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஹமாஸ், ஹவுதி போன்ற அமைப்புகளுக்கு எதிராக ஏற்கனவே தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல், தற்போது சிரியாவுக்கும் எதிராக போர்வீரர்களை திருப்பியுள்ளது. கடந்த மாதம் இஸ்ரேல் – ஈரான் இடையே 12 நாட்கள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, சிரியாவை நோக்கி தாக்குதல் தொடரப்படுகிறது.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அரசு நிர்வாகத்தில் இயங்கும் ஒரு டிவி நிலையம் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலின் போது நேரலை செய்தி வாசித்த பெண் தொகுப்பாளர் ஒருவர் நடுங்கிப் பயந்து ஓடுவது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்தக் கட்டிடத்தை குலுங்க வைத்த அந்த தாக்குதல், இஸ்ரேலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அமைந்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இதை உறுதி செய்யும் வகையில், “ஏற்கனவே எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டது. இனி பதிலடி மட்டுமே வரும்” என அறிவித்துள்ளார். தெற்குப் பகுதியில் உள்ள சுவைடா நகரிலும் தொடர்ந்து தாக்குதல் நடப்பதாகவும் கூறியுள்ளார்.
இதற்கான பின்னணியில், சிரியாவில் உள்ள துருஸ் சமூகத்திற்கும், ஆயுதக்குழுக்களுக்கும் இடையிலான மோதலே உள்ளது. இஸ்ரேல், துருஸ் சமூகத்திற்கு ஆதரவு அளிக்கிறது என்றும், அந்த மக்களைப் பாதுகாப்பது தங்களது கடமை என்றும் பிரதமர் நெதன்யாகுவும் நேரடியாக தலையெடுத்து கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. முக்கியமான இடங்களான பாதுகாப்பு அமைச்சகம், டிவி நிலையம் உள்ளிட்டவை இஸ்ரேலின் தாக்குதலால் சேதமடைந்துள்ளன.
இந்த தாக்குதல்களின் விளைவாக சிரியா மக்களில் பெரும் பதற்றம் நிலவுகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் தொடரும் தாக்குதல்கள் புதிய பிராந்திய போர் நிலையை உருவாக்குமா என்பது தற்போது முக்கியக் கேள்வியாகியுள்ளது.