
பஹல்காம் பகுதியில் நடைபெற்ற கொடூரமான தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடுமையான பதற்றம் நிலவுகிறது. மதத்தின் பெயரால் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பதாக இந்தியா நம்புகிறது. காரணம், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் குடிமக்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது, பாகிஸ்தான் குடிமக்களின் விசாக்களை ரத்து செய்தது, வாகா எல்லையை மூடியது என பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போரின்றி தண்டனை கொடுக்கும் வகையில் மோடி அரசு தீர்மானங்கள் எடுத்து வருகிறது.

இதற்குப் பதிலளிக்க பாகிஸ்தானும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளி வழியாக பயணிக்க தடை விதிக்கப்பட்டது, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், எல்லைப் பகுதியில் தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் எல்லையில் அமைதியின்மை நிலவுகிறது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து தொடர்ந்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படுவதாகவும், இந்திய ராணுவம் அதை திறம்பட எதிர்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் தொடர்ச்சியான துணிகரச் செயல்கள் காரணமாக, இந்தியா தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவை தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே உயர் மட்டத்தில் இந்தத் தீர்மானம் குறித்துப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததன் விளைவாக எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டிலும் சர்வதேச எல்லையிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
பிப்ரவரி 2021இல் நடைபெற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆதரிக்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் போன்ற தீவிரவாத அமைப்புகள் ஜம்மு காஷ்மீரில் வன்முறைகளை தூண்டி வருகின்றன. இதனால் சமீப ஆண்டுகளில் பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியது. இதில் காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, பாதுகாப்பு அமைச்சரவைக் குழு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். இந்த தாக்குதல் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும், அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் கூறினார். இதில், பாகிஸ்தானுடன் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான திட்டம் உள்ளடங்கும் எனத் தெரிகிறது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் குடிமக்களுக்கான விசாக்கள் ஏப்ரல் 27, 2025க்குள் ரத்து செய்யப்பட்டன. மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்ரல் 29, 2025 வரை செல்லுபடியாகும். இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் குடிமக்கள் தங்கள் விசா காலாவதியாகும் முன் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியா பாகிஸ்தானுடனான தூதரக உறவுகளையும் குறைத்துள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரதிநிதிகளை வெளியேற்றியுள்ளது மற்றும் இஸ்லாமாபாத்திலுள்ள தூதரக பணியாளர்களை குறைத்துள்ளது. வாகா எல்லையும் மூடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலவி வந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியக் குடிமக்கள் உடனடியாக நாடு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், “இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் வெடிக்கும் வாய்ப்பு உள்ளதா?” என்ற கேள்வி மீண்டும் தலைதூக்கியுள்ளது.