தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்டநாளாக நிலவி வரும் எல்லைப் பிரச்சனை கடந்த மே 28-ம் தேதி தீவிரமடைந்தது. ‘எமரால்டு முக்கோணம்’ எனப்படும் எல்லை பகுதியில் இரு நாடுகளின் படைகள் மோதியதில், கம்போடிய வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா, கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் செனுடன் 17 நிமிடங்கள் தொலைபேசியில் பேசினார்.
இந்த உரையாடலில், தாய்லாந்து ராணுவத் தளபதியை “தன் எதிரி” என அவர் கூறியதாக தகவல்கள் வெளியாகின. அந்த உரையாடல் இணையத்தில் கசிய, நாடு முழுவதும் அவரது அரசியல் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளானது. இதனை அடுத்து, பல பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் பிரதமர் பதவியிலிருந்து உடனே விலக வேண்டுமென கோரினர். அவரது உரையாடல், தேசிய பாதுகாப்பு, ராணுவ ஒற்றுமை மற்றும் வெளிநாட்டு கொள்கையில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், கம்போடியாவுக்கு ஆதரவாகவும், தாய்லாந்து ராணுவத்தை மதிப்பிழைக்கும் வகையிலும் பேசியதாக கூறி, அந்நாட்டு செனட் குழு அவர்மீது அரசியலமைப்பு மீறல் குற்றச்சாட்டை எழுப்பியது. இவரது நடவடிக்கைகள், அரசு நெறிமுறைகளுக்கு எதிரானதாக இருந்ததாகவும், அதிகார வரம்பை மீறியதாகவும் கூறி, அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையை முன்னிட்டு, அவரை பதவியில் இருந்து விலக்கவேண்டும் என கோரப்பட்டது.
இந்நிலையில், தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம், விசாரணை முடிவாகும் வரை பேடோங்டார்ன் ஷினவத்ராவை ஜூலை 1 முதல் பிரதமர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பித்தது. இது தாய்லாந்து அரசியல் சூழலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.