இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ தளபதி மகள் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது. ஏன் தெரியுங்களா? அதுவும் தம்பி மகனே மாப்பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி சையத் அசிம் முனீர் மகள் மஹ்னூர் என்பவருக்கு கடந்த டிசம்பர் 26ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. ராவில்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்தில் மக்னூருக்கும், அப்துல் ரஹ்மான் என்பவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது.
இந்நிகழ்வில் சுமார் 400 பேர் கலந்து கொண்டதாகவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மிக மிக ரகசியமாக இந்நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜாஹித் கிஷ்கோரி என்பவர் செய்தி வெளியிட்டுள்ளார். அசிம் முனீருக்கு மொத்தம் நான்கு மகள்கள் ஆவர். அதில் மூன்றாவது பெண்ணுக்குதான் தற்போது திருமணம் நடந்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னணி அரசியல் தலைவர்கள், ராணுவ தலைவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இந்த நிகழ்வு மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொடர்பான ஒரு புகைப்படம் கூட பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அசிம் முனீர் மகளின் திருமண நிகழ்வில் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ தலைவர், ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல்கள், முன்னாள் தலைவர்கள் போன்ற பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.பாதுகாப்பு காரணமாகவே நிகழ்வு ரகசியமாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அசிம் முனீரின் பெண், அண்ணன் முறை கொண்டவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அசிம் முனீரின் சகோதரர் காசிம் முனீரின் மகன்தான் கேப்டன் அப்துல் ரஹ்மான். தனது சகோதரனின் மகனைதான் அசிம் முனீர் தனது மகளுடன் திருமணம் செய்துவைத்துள்ளார். தங்களுக்கு குடும்பத்திற்குள்ளேயே திருமணத்தை நடத்தியது அந்நாட்டின் பாதுகாப்பு வட்டத்தில் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானிலும், இஸ்லாத்திலும் இதேபோல் சகோதரன் முறை கொண்டவரை தங்களின் பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது வழக்கமாக உள்ளதுதான்.