வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், விசா நடைமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தினார். “அமெரிக்க மக்களுக்கு முன்னுரிமை” என்ற அணுகுமுறையில், அவர் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இது மட்டுமன்றி, அமெரிக்கா பல நாடுகளுடன் பரஸ்பர வரி போர் நடத்துவதில் ஈடுபட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களிடம் அரசியல் கருத்து தெரிவிப்பதை எதிர்த்து, அவ்வாறு செய்யும் மாணவர்களை உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வைக்கவும் உத்தரவிடப்படுகிறது.
இந்தக் காரணங்களால், அமெரிக்காவுக்கு படிக்க செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த நிதியாண்டில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 28 சதவீதம் குறைந்துள்ளது.
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு, எப் 1 மற்றும் எம் 1 விசாக்கள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம், 3,48,446 மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வந்தனர். ஆனால், அந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்தில் 2,55,447 ஆக குறைந்துவிட்டது.
வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில், புதிய மாணவர்கள் சேர்க்கப்படுவதை முன்னிட்டு, இந்திய மாணவர்களின் சேர்க்கை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது, அதில் பெரிய சரிவு காணப்படுகிறது.
மாற்று நேர்முக பயிற்சி (OPT) திட்டம், வெளிநாட்டு மாணவர்களுக்கு படிப்பை முடித்த பிறகு, அமெரிக்காவில் மூன்று ஆண்டுகள் கூடுதல் பயிற்சி பெற வாய்ப்பு வழங்கியிருந்தது. இந்த திட்டத்தை நிறுத்துவதற்கான மசோதா தற்போது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதனையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்கு ஒரு காரணமாக எடுத்துக்காட்டுகின்றனர் ஆய்வாளர்கள்.
விசா கட்டுப்பாடுகள் மற்றும் கல்விக் கட்டண உயர்வு ஆகியவை சேர்ந்து, டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் இந்திய மாணவர்களின் அமெரிக்காவுக்கான கல்விச் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது.