வாஷிங்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத், ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த நாட்டின் பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை எனத் திட்டவட்டமாக தெரிவித்தார். ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதல் 10 நாட்களாக தொடரும் நிலையில், அணு ஆயுத தயாரிப்புக்கான மையங்களை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அமெரிக்கா கடந்த இரவில் ஈரானில் உள்ள மூன்று முக்கிய அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்கியது.

இந்த தாக்குதல், அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் இடம்பெற்றதாகவும், போர்டியோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி மையங்கள் மீது துல்லியமான தாக்குதலாக இது அமைந்ததாகவும் அமைச்சர் கூறினார். இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஈரானின் அணுசக்தி திட்டத்தை வீழ்த்துவதே என்று அவர் குறிப்பிட்டார். அதேசமயம், இந்த தாக்குதல் ஈரானிய ராணுவத்தையோ, மக்களையோ குறிவைக்கவில்லை என்பதும் அவர் கூறிய கருத்தில் முக்கிய அம்சமாக உள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறையின் இந்த நிலைப்பாடு, சர்வதேச விமர்சனங்கள் உள்ள சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. ஈரானும் அமெரிக்காவும் நேரடி போர் நிலைக்குச் சென்றுவிடும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல நாடுகள் இந்த மோதலை விமர்சித்து வரும் நிலையில், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் எப்படி பதிலளிக்கின்றன என்பதும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.