வாஷிங்டன்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முக்கிய குறிக்கோள் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வரும் இந்தியாவுக்கு, அமெரிக்கா கூடுதல் வரி மற்றும் அபராத வரி விதித்துள்ளது. இது உலகளவில் விதிக்கப்பட்டிருக்கும் மிக அதிக வரியாகக் கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை குறைத்து போரை நிறுத்தும் நோக்கமே இதன் பின்னணியாக உள்ளதாகவும் துணை அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் மீது இராணுவத் தாக்குதலை ரஷ்யா 2 வாரங்களுக்குள் நிறுத்தாவிட்டால் மேலும் அதிக வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசியல் வட்டாரங்களுக்குள்ளும் இதற்கான எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் டிரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
“உக்ரைன் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டால் ரஷ்யா உலக பொருளாதாரத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆனால் கொலைகள், தாக்குதல்கள் தொடர்ந்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும்” என்று துணை அதிபர் வான்ஸ் எச்சரித்தார்.
சமீபத்திய வாரங்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே சில பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், தீர்மானம் எட்டப்படவில்லை. டிரம்ப் எடுத்திருக்கும் இந்த கடுமையான வரி முடிவுகள், உலக வர்த்தகத்திற்கே புதிய சவால்களை உருவாக்கும் வகையில் உள்ளன.