வாஷிங்டன்: எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா மற்றும் சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்டை நாடான சீனாவின் இராணுவம் மே 2020 இல் கிழக்கு லடாக்கிற்குள் நுழைய முயன்றது;
இரு நாட்டு வீரர்களும் மோதினர். கல்வான் பகுதியில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்தால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதனால், நான்கு ஆண்டுகளாக இரு நாட்டு ராணுவங்களும் எல்லையில் நேருக்கு நேர் நின்று கொண்டிருந்தன. பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின், சமீபத்தில் தான் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இரு நாடுகளும் சில நாட்களாக ராணுவத்தை வாபஸ் பெற்று வருகின்றன.
மே 2020 க்கு முன்பு இருந்ததைப் போலவே, இரு படைகளும் எல்லையில் ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கும். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது: எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியாவும் சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இதை வரவேற்கிறோம். ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இரு நாடுகளும் ராணுவத்தை திரும்பப் பெற்றுள்ளன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.