உலகின் மிக வலிமையான ராணுவத்தையும், மிகப்பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டையும் கொண்ட அமெரிக்கா, உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் 750-க்கும் மேற்பட்ட ராணுவத் தளங்களை வைத்துள்ளது. ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளில் ஏராளமான தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் ஒரு கூட அமெரிக்க ராணுவத் தளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது சாதாரணமான தேர்வாக இல்லாமல், இந்தியா எடுத்த முக்கியமான அரசியல் மற்றும் பாதுகாப்பு முடிவாகும்.

இந்தியாவின் வரலாற்று அனுபவம், குறிப்பாக காலனித்துவ ஆட்சி பாதிப்புகள், இத்தகைய வெளிநாட்டு படைத்தளங்களை இங்கு வரவழைப்பதைத் தடுப்பதாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு பின், எந்தவொரு வெளிநாட்டு ராணுவமும் இந்திய நிலத்தில் அடி வைக்கக்கூடாது என்ற கொள்கையை பின்பற்றி வருகின்றது. நேரு காலத்திலிருந்தே இக்கொள்கை தொடர்ந்து வருவது, இந்தியாவின் முழுமையான அதிகாரத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகும். இதன் காரணமாகவே அமெரிக்கா போன்று நெருக்கமான நாட்டுடன் கூட, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டாலும், அவர்கள் ராணுவம் இங்கு இருக்கக்கூடாது என்ற நிபந்தனையை இந்தியா உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
மேலும், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது. அணு ஆயுதங்கள், வலிமையான ராணுவம், சைபர் பாதுகாப்பு திறன் ஆகியவை இந்தியாவை தனித்துவமாக அமைத்துள்ளன. இந்த நம்பிக்கையே, வெளிநாட்டு ராணுவ ஆதரவை நாடாமல் இந்தியா சுயமாக செயல்படக் காரணமாக உள்ளது. அதேவேளை, உலகெங்கிலும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அரசியல் மோதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதையும் இந்தியா கவனித்துள்ளது. ஈரான், ஈராக், குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த ஆட்சி மாற்றங்கள் அமெரிக்க ராணுவ தளங்களின் ஊடாகவும், புலனாய்வு நடவடிக்கைகள் மூலமாகவும் அமைந்ததை இந்தியா புரிந்துள்ளது.
இன்னொரு முக்கியமான அம்சம், இந்தியா எந்தவொரு நாட்டின் அழுத்தத்துக்கும் ஆளாகாததுடன், தன்னாட்சி மற்றும் இராஜதந்திர சுதந்திரத்தை நம்பும் நாடாக உள்ளது. LEMOA போன்ற இராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டாலும், அமெரிக்க படைகள் இந்தியாவில் இருப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இது இந்தியாவின் சுயமான வெளிவிவகாரக் கொள்கையை வெளிப்படுத்துகிறது. இந்நிலை, இந்தியாவை ஒரு பெரும் சக்தியாக உலக அரங்கில் நிறுவுவதற்கான அடித்தளமாக விளங்குகிறது.