உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர உச்சிமாநாடு ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் தொடங்கியது. இந்த மாநாட்டில், உலகளாவிய தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் மற்றும் அதன் மீதான சரியான கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
இன்று (ஜனவரி 23, 2025) நான்காம் நாளான இன்று, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோர் முக்கிய உரைகள் வழங்கினர்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது உரையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் சமூக ஊடகங்கள் மூலம் பரவும் தவறான தகவல்கள் மற்றும் சைபர் தாக்குதல்கள் எதிராக சட்டங்கள் உரிய முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். குறிப்பாக, “தகவல் பரப்பும் செயல்களில் உள்ள தவறுகளை தடுக்கும் வகையில் சமூக ஊடக நிர்வாகங்களை சீர்திருத்த வேண்டும்” எனவும், “டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்” எனவும் அவர் கூறினார். மேலும், ஐரோப்பிய மையத்துக்கான வெளிப்படைத்தன்மை அதிகாரங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார்.
நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, உக்ரைனுக்கான ஆதரவை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்து பேசியார். “உக்ரைனுக்கு ஆதரவு குறையக் கூடாது, மாறாக அதை அதிகரிக்க வேண்டும். ரஷ்யா வெற்றி பெற்றால், அது வடகொரியா மற்றும் சீனாவின் தலைவர்களுக்கு பெருமை சேர்க்கும்” என அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டின் மூன்றாவது நாளில், இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதில் முக்கியமானது, முன்னணி எரிசக்தி நிறுவனம் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ், நாகரக்ர்ணூல், மஞ்சேரியல் மற்றும் முலுகு மாவட்டங்களில் நீர் மின்சார திட்டங்களை உருவாக்க ரூ. 45,500 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மாநிலம் 54 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் ரூ. 15.70 லட்சம் கோடி மதிப்புள்ள முதலீட்டை மாநிலம் ஈர்த்துள்ளதாகவும், இதன் மூலம் 15.95 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பொருளாதார மன்றம் 2025 மாநாட்டின் முக்கிய அம்சம், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புலங்களில் சரியான கட்டுப்பாடுகள், தொழில்நுட்ப சீர்திருத்தங்களை எடுக்க தேவையான பணிகள் என்பவற்றை நாடுகள் வலியுறுத்தின. இதன் மூலம் உலகளாவிய பொருளாதாரத் திட்டங்களுக்கான புதிய மாற்றங்களை உருவாக்குவது முக்கியமானதாகும்.