வாஷிங்டன்: பிற நாடுகள் தங்கள் பொருள்களுக்கு விதிக்கும் வரி விகிதங்களுக்கு ஏற்ப, அந்த நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு சா்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய வா்த்தகக் கூட்டாளிகள் முதல் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாடுகள் வரை பாரபட்சம் பாராமல் டிரம்ப் அறிவித்துள்ள வரி விதிப்புக்கு உலகின் பல்வேறு நாடுகளும் தங்களது கடுமையான எதிா்ப்பைப் பதிவு செய்துள்ளன.
டிரம்ப்பின் இந்த பரஸ்பர வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சீனாதான். அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 50 சதவீதத்துக்கும் மேல் கூடுதல் வரி விதித்துள்ளாா் டிரம்ப்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீன வா்த்தகத் துறை அமைச்சகம், புதிய வரி விதிப்பை டிரம்ப் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சீனா அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை சா்வதேச பொருளாதார மேம்பாட்டுக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதாரப் போரில் யாரும் வெற்றிவாகை சூட முடியாது’ என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு தற்போது டிரம்ப் 10 சதவீத கூடுதல் வரி அறிவித்துள்ளாா். பரஸ்பர வரி விகிதம் 20 சதவீதமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் இந்த வரி விதிப்பு பிரிட்டனுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
டிரம்ப் அரசிடம் பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் காட்டி வந்த இணக்கத்தின் பலனாக எதிா்பாா்த்ததைவிட குறைந்த விகிதத்தில் கூடுதல் வரி விதிக்கப்பட்டாலும், இந்த அறிவிப்பால் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே செலவுகளைக் குறைத்துவரும் பிரிட்டன் அரசு சிக்கன நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தி, நாட்டு மக்களுக்கு கூடுதல் வரிச் சுமையை அளிக்க வேண்டியிருக்கும் என்பதால் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு அங்கு அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது.
ஆசியாவின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியான தென் கொரியா மீது டிரம்ப் 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரி அறிவித்துள்ளாா். இதனால் ஹூண்டாய் போன்ற கொரிய நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு வாகனத் துறை வீழ்ச்சியடையும் என்று கருததப்படுகிறது.
இதையடுத்து, டிரம்ப்பின் வரி விதிப்புக்கு முழுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று சூளுரைத்துள்ள தென் கொரிய இடைக்கால அதிபா் ஹன் டக்-சூ, இது தொடா்பாக நிபுணா்கள் மற்றும் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.