புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று பாக். பிரதமருக்கு அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அமெரிக்கா அறிவுரை வழங்கி உள்ளது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம், அதே மாகாணத்தில் உள்ள பஸ்னி விமானப்படை தளம், கில்ஜித் பகுதியில் உள்ள ஸ்கர்டு விமானப்படை தளம், கைபர் பதுன்கவாவில் உள்ள ஸ்வாட் விமானப்படைத் தளம் ஆகியவற்றின் மீது இந்தியா தாக்குதல் நடத்தக்கூடும் என்று பாகிஸ்தான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த பகுதிகளில் பயணிகள் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவுடன் நேரடி மோதலை தவிர்க்க அமெரிக்காவின் உதவியை பாகிஸ்தான் அரசு நாடியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சர் மார்கோ ரூபியோ மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார். அப்போது, ‘பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் உறுதி அளித்தார். தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். அதேநேரம் இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘பஹல்காம் தாக்குதல் தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட வேண்டும். குறிப்பாக இந்தியாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’ என்று மார்கோ ரூபியோ அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவும் பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக இரு நாடுகளும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.