உலகளவில் இளைஞர்களிடம் குடல் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்த நோயின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. இதற்குக் காரணமாக வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றங்களை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இப்போது புற்றுநோய் என்பது வயதானவர்களுக்கு மட்டுமன்று, இளையவர்களுக்கும் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டது. அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தரவுகளின்படி, 55 வயதிற்குள் குடல் புற்றுநோய் ஏற்படும் விகிதம் கடந்த இரு தசாப்தங்களில் இரட்டிப்பாகியுள்ளது. இது இந்த நோய் இளம் வயதினரிடையே ஆபத்தான வகையில் பரவி வருவதைக் காட்டுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கைமுறை காரணிகள் பெருங்குடல் புற்றுநோய்களில் 90% வரை பங்கு வகிக்கின்றன. 2022ஆம் ஆண்டு மட்டும் 1.9 மில்லியனுக்கும் அதிகமான புதிய குடல் புற்றுநோய் வழக்குகள் உலகம் முழுவதும் பதிவாகி, சுமார் 9,04,000 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். குடல் புற்றுநோயுடன் சேர்த்து, மார்பகம், நுரையீரல், கருப்பை, கணையம் உள்ளிட்ட பிற புற்றுநோய்களும் இளையவர்களிடையே அதிகரித்து வருகின்றன.
‘தி லான்செட் ஆன்காலஜி’ இதழில் வெளியான சமீபத்திய ஆய்வு, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் இளையவர்களிடம் பெருங்குடல் புற்றுநோயின் வேகமான வளர்ச்சியை வெளிக்கொணர்கிறது. வயதானவர்களில் இந்த நோய் விகிதம் குறைந்திருக்கும் நிலையில், இளம் பெண்களில் அதிகரிப்பு வேகமாக நடைபெறுவதாகும். மோசமான உணவுபழக்கங்கள், உடலழுத்த குறைபாடு மற்றும் உடல் பருமன் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.
மேலும், “நேச்சர்” இதழில் வெளியான மற்றொரு ஆய்வில், ஈ. கோலையின் சில வகைகள் உற்பத்தி செய்யும் கோலிபாக்டின் எனும் டி.என்.ஏ நச்சுப் பொருள் இளம் நோயாளிகளில் பெருங்குடல் புற்றுநோயை தூண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 40 வயதிற்குட்பட்டவர்களிடம் இது மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக வாய்ப்புடன் காணப்படுகிறது. இது குடல் நுண்ணுயிரிகளின் வேறுபாடுகள் புற்றுநோய்க்கு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
பேக் செய்யப்பட்ட உணவுகள், இனிப்பான பானங்கள் மற்றும் ரெடிமேட் உணவுகள் போன்ற அதி-தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள், குடல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். இந்த உணவுகள் உடலில் வீக்கத்தையும், இயற்கையான குணப்படுத்தும் செயல்முறைகளைத் தடுக்கக்கூடியதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மன அழுத்தம் மற்றும் மனநலக் கோளாறுகளும் இளம் வயதினரிடையே புற்றுநோயின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன. நாள்பட்ட மன அழுத்தம் உடலில் வீக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டல மாற்றங்களை ஏற்படுத்தி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியதாகும்.
பெருங்குடல் மற்றும் மலக்குடலைப் பாதிக்கும் புற்றுநோய், குடல் புற்றுநோயாக அழைக்கப்படுகிறது. மலச்சிக்கல், ரத்தம் கலந்து வரும் மலம், வலிகள், வயிற்றுப்பிடிப்பு, எடை குறைப்பு மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.