திண்டுக்கல்: இந்தியன்-2 திரைப்படத்திற்கு இ-சேவை உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் காட்சிகள் தங்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசும்போது.
தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2-திரைப்படத்தில் நடிகர் மனோபாலா நடிக்கும் ஒருசில காட்சிகளில் இ-சேவை மைய ஆபரேட்டர்கள் ரூ.300 கொடுத்தால் தான் ஆதார் தொடர்பான சேவைகள் செய்ய முடியும் என்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காட்சிகள் மூலம் இ-சேவை மைய ஆபரேட்டர்களை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மைய தொழில் மீதும், ஆபரேட்டர்கள் மீதும் பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில் காட்சிகள் இருப்பதால் குறிப்பிட்ட அந்த காட்சியை மட்டும் இந்தியன்-2 திரைப்படத்தில் இருந்து நீக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கர் படக்குழுவினருக்கும், திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
தவறும் பட்சத்தில் திண்டுக்கல் மாவட்ட இ-சேவை மைய உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ரஞ்சித், நவீன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.