சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இளம் அறிவியல் வேளாண் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவை விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு மாணவர்கள் நேற்று முதல் 8.6.2025 வரை http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பங்களை நிரப்பி விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டில் 6,971 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு, தொழிற்கல்வி பாடங்களில் 5% இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு, முன்னாள் ராணுவத்தினரின் சந்ததியினருக்கான இடஒதுக்கீடு போன்ற சிறப்பு இடஒதுக்கீடுகள் பின்பற்றப்படும்.
இந்த ஆண்டு வேளாண் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தகவலியல் ஆகிய இரண்டு புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படிப்புகளில் 80 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ஜூன் 16-ம் தேதி கவுன்சிலிங் தொடங்கும். வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க ஒரு தேடல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.