சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. சிறிய கடைகளில் தரத்திற்கு ஏற்ப ரூ.75 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனப்பள்ளி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடகாவில் உள்ள கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் கடந்த மாதம் கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.70 ஆக உயர்ந்தது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த வாரம் ரூ.40க்கு விற்கப்பட்டது. தக்காளி விலை உயர்வு குறித்து கோயம்பேடு மார்க்கெட் மற்றும் தக்காளி வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறுகையில், கர்நாடகா, கேரள மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில சந்தைகள் தற்போது அப்பகுதி மக்களின் தக்காளி தேவையை பூர்த்தி செய்கின்றன. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது என்றார்.