சென்னை: தமிழக அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையில் மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் வந்துள்ளார். இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரணையின் பிறகு, உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி, தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும், இனி வரும் காலங்களில் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு ஒரு மாதம், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப 3 மாதங்கள் வரையான கால நிர்ணயத்தையும் உத்தரவு பிறப்பித்தது. இந்த தீர்ப்பு இந்தியாவின் அனைத்து ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன், குடியரசுத் தலைவர் திரேவபதி முர்மு, உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார். குறிப்பாக, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் கால நிர்ணயம் அரசியலமைப்பில் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், அவர் குறிப்பிட்டுள்ளார், குடியரசுத் தலைவர் மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் 14 கேள்விகளை எழுப்பி குறிப்பு அனுப்பியதை அவர் அறிந்ததாக கூறியுள்ளார். இந்த குறிப்பு, குறிப்பாக, தமிழக அரசின் வழக்கின் சம்பந்தமாக, சட்டம் மற்றும் அரசியலமைப்பின் விளக்கம் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதை நோக்கமாக கொண்டதாகவும், இந்த தீர்ப்பு தமிழகத்திற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
இது, மாநிலங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான கூட்டாட்சி அமைப்பையும், அதிகாரப் பகிர்வையும் நிலைநிறுத்துவதாக அமைகின்றது. உச்சநீதிமன்றம், ஆளுநரின் “வீட்டோ” அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தாமதப்படுத்த முடியாது எனத் தீர்வு அளித்துள்ளது. இதன் மூலம், மாநிலங்களில் சட்டம் இயற்றும் அமைச்சரவைகள், ஆளுநரின் தலையீட்டைத் தவிர்க்க முடியும்.
இந்த தீர்ப்பை, பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக, மாநில அரசுகள் பயன்படுத்தி தங்களின் சுயாட்சியையும் கூட்டாட்சித் தத்துவத்தையும் பாதுகாக்கலாம்.