பெங்களூரு: சட்டசபை கூட்டத்தொடரின் போது, மதிய உணவு சாப்பிட்ட பின், எம்.எல்.ஏ.,க்கள் சிறிது நேரம் துாங்குவதற்கு, சிறப்பு இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. இது சர்ச்சையையும், கடும் கண்டனங்களையும் எழுப்பி உள்ளது. அது சட்டசபையா இல்லை கெஸ்ட் ஹவுஸா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் காலையில் துவங்கி, மதியம் வரை நடக்கும். அதன்பின், மதியம் உணவு இடைவேளை விடப்படும். அப்போது, விதான் சவுதா அருகில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பவனுக்கு செல்லும் பலர், மதிய கூட்டத்துக்கு வருவதற்கு தாமதம் செய்வதாக தெரிகிறது. அதாவது மதிய உணவு முடிந்ததும், சிலர் அறையில் படுத்து துாங்கி விடுவதாக, சபாநாயகர் காதருக்கு தெரிய வந்துள்ளது.
இது குறித்து, சட்டசபையில் சபாநாயகர் பேசியதாவது: எம்.எல்.ஏ.,க்களின் வசதிக்காக, காலை சிற்றுண்டி, மதியம் தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிய உணவு சாப்பிட்ட பின், சிறிது நேரம் துாங்கி விட்டு வருகிறேன் என்று செல்லும் சில எம்.எல்.ஏ.க்கள், மீண்டும் சட்டசபைக்கு வருவதே இல்லை.
இதை தடுக்கும் வகையில், மதிய உணவு சாப்பிட்ட பின், எம்.எல்.ஏ.,க்கள் துாங்குவதற்காக, சட்டசபைக்கு வெளியே உள்ள வளாகத்தில், ‘ரிக்ளைனர்’ என்ற சிறப்பு இருக்கை சோதனை முறையில் போடப்பட்டுள்ளது.
அதன் மீது, எம்.எல்.ஏ.,க்கள் சிறிது நேரம் அமர்ந்து துாங்கி விட்டு, பின், சட்டசபைக்கு வரலாம். அந்த இருக்கை வசதியாக இருந்தால், அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் முதல், முழுமையாக போடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளப்பி உள்ளது. சட்டசபையில் மக்களின் பிரச்னைகளை பேசாமல் தூங்கி எழுவதற்கு மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கின்றனர் என்று கடும் கண்டன குரல்கள் எழுந்துள்ளது.