கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துகளுக்கு எதிராக பெங்களூரில் கன்னட வர்த்தக அமைப்பு போராட்டம் நடத்தியது கண்ணட மொழி குறித்த தனது கருத்துக்களுக்கு நடிகர் கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது ‘தக் லைஃப்’ படம் கர்நாடகாவில் வெளியாகாது என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை எச்சரித்துள்ளது. ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் நரசிம்ஹா கூறியதாவது:-
“கமல்ஹாசனின் படத்தைத் தடை செய்ய பல கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, நாங்கள் அவர்களைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து விவாதித்தோம். கமல்ஹாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். அவர் செய்தது தவறு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் அவரைச் சந்தித்து பேசவும் முயற்சிக்கிறோம். கமல்ஹாசன் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை. இன்று அல்லது நாளை அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கன்னட அமைப்புகளை ஆதரித்து கடுமையாகப் போராடுவோம்.

அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் எந்த சூழ்நிலையிலும் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்,” என்று அவர் கூறினார். மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. கன்னட நடிகர் சிவராஜ் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் உள்ள அந்த ஊரில் கன்னட நடிகர் ராஜ் குமாரின் குடும்பம் எனது குடும்பம்.
கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது. நீங்களும் (சிவராஜ்குமார்) அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றார். கர்நாடகாவில் கமல்ஹாசனின் உரைக்கு கன்னட ரக்ஷண வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஷாப்பிங் மால்களில் வைக்கப்பட்டிருந்த ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர பதாகைகளை அவர்கள் கிழித்தெறிந்தனர். படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக ஊடகங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.