சென்னை: வங்காளதேசத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களையும் பணி செய்யும் நபர்களையும் பாதுகாப்பாக அழைத்துவர தமிழ்நாடு அரசு உரிய முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பக்கத்து நாடான வங்காளதேசத்தில் உள்நாட்டுப் பிரச்சனையின் காரணமாக மிகப்பெரிய அளவில் கலவரம் நடைபெற்று வருவதாக அறிய முடிகிறது. இந்தியாவில் நீட் தேர்வு நெருக்கடியால் வங்காள தேசத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படிக்க அங்கு இருப்பதும் தெரிய வருகிறது.
பணியாளர்களாக வேலை செய்பவர்களும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தவித்து வருகின்றனர். வங்காளதேசத்தில் மருத்துவம் பயிலும் மாணவர்களையும் பணி செய்யும் நபர்களையும் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்புவதற்குத் தமிழ்நாடு அரசு உரிய முன் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.