மதுரை: திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ். வெங்கடேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. கோயில் இடத்தை அடக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஏ.டி. மரியகிளாட் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி, இறந்தவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர வேறு எந்த இடத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் இறந்தவர்களை அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ அரசு நிலம் இல்லை என்று வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அறநிலையத் துறை அதிகாரிகள், அரசு நிலமும், நத்தம் புறம்போக்கு நிலமும் இருப்பதாகக் கூறியுள்ளனர். எனவே, திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கக் கூடாது. உடல்களைப் புதைக்க மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.