புது டெல்லி: அரசியலமைப்புச் சட்டம் என்பது உச்சபட்ச சட்டம் என்றும், ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன என்றும் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறினார். பி.ஆர். கவாய் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். இந்த சூழலில், நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் அமராவதியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளில் – நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை – எது உயர்ந்தது என்பது குறித்து எப்போதும் விவாதம் நடந்து வருகிறது. நாடாளுமன்றம் உயர்ந்தது என்று பலர் கூறினாலும், என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டம் உயர்ந்தது. ஜனநாயகத்தின் மூன்று பிரிவுகளும் அதன் கீழ் செயல்படுகின்றன. சட்டத்தைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உண்டு.

ஆனால் அரசியலமைப்பின் கட்டமைப்பை மாற்ற முடியாது. ஒரு நீதிபதியாக, குடிமக்களின் உரிமைகள், அரசியலமைப்பின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளின் பாதுகாவலர்கள் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நமக்கு அதிகாரம் மட்டுமல்ல, நம்மீது சுமத்தப்பட்ட கடமையும் இருப்பதாக நாம் உணர வேண்டும். ஒரு நீதிபதி தீர்ப்பை எழுதும்போது சுதந்திரமாக சிந்திக்க வேண்டும். மக்கள் தனது தீர்ப்பைப் பற்றி என்ன சொல்வார்கள் என்பதன் அடிப்படையில் ஒரு நீதிபதி செயல்படக்கூடாது.
எனது தீர்ப்புகள் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் இருக்கும். சுதந்திரப் போராட்டத்தின் போது என் தந்தை கைது செய்யப்பட்டார். அப்போது, வழக்கறிஞராக வேண்டும் என்ற அவரது கனவு நனவாகவில்லை. இதன் காரணமாக, என் தந்தை என்னை வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நான் இளமையாக இருந்தபோது, நான் ஒரு கட்டிடக் கலைஞராக வேண்டும் என்று விரும்பினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.