புது டெல்லி: நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகி, 2024-25-ம் ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை 1, 2017 அன்று அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிக்கையில், “ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு வசூல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, நாட்டின் நிதி நிலைமை வலுவடைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது, பதிவுசெய்யப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 65 லட்சமாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 1.51 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ரூ.1,000 ஆக இருந்த வசூல் ரூ.1,000 ஆக உயர்ந்துள்ளது.

2020-21 நிதியாண்டில் 11.37 லட்சம் கோடி ரூபாய் வசூலாகியிருந்தது, 5 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் ரூ. 20.18 லட்சம் கோடி வசூலாக இருந்த நிலையில், 2024-25-ம் ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, சராசரி மாதாந்திர வசூல் ரூ. 1.84 லட்சம் கோடியாக இருந்தது.
முந்தைய நிதியாண்டில், சராசரி மாதாந்திர வசூல் ரூ. 1.68 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதம், ஜிஎஸ்டி வசூல் ரூ. 2.37 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு இதுவே அதிகபட்ச மாதாந்திர வரி வசூலாகும்.