சென்னை: ஆரோக்கிய நன்மைகள்… இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவை பிறப்பிடமாகக் கொண்ட நெக்டரைன் ஒரு இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்ட பழம். பீச் பழத்தின் குணங்களை ஒத்திருக்கும் இந்தப் பழத்தின் தோல் மட்டும் பீச்சை விட மிருதுத் தன்மை கொண்டதாயிருக்கும். நெக்டரைன் பழத்திலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள் பீச் பழத்தில் இருப்பதை விட அதிகம் என்றே கூறலாம்.
நெக்டரைனில் பாலிஃபினால்ஸ், வைட்டமின் C, பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராட வல்லவை. உடலில் ஃபிரீரேடிக்கல்களின் அளவை இவை சமநிலைப்படுத்தும். நாள்பட்ட வியாதிகள் வரும் ஆபத்தைத் தடுத்து மொத்த உடல் ஆரோக்கியம் காக்க உதவும். குறிப்பாக, பக்க விளைவுகள் ஏதுமின்றி மார்பகப் புற்றுநோயை உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை அழிக்கும். ஆண்களின் நுரையீரலில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைத் தடுக்கவும் செய்யும்.
இதிலுள்ள பொட்டாசியம் சத்தானது சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்தி இரத்த அழுத்தத்தை நார்மலாக்க உதவும். நெக்டரைனில் உள்ள அதிகளவு நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும்.
நார்ச் சத்துக்கள் செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். மலச்சிக்கலை நீக்கும். மேலும், குடலிலிருக்கும் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி புரிந்து குடலியக்கம் சீராக நடைபெறச் செய்யும்.
நெக்டரைனில் உள்ள அதிகளவு வைட்டமின் C உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். மேலும், இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும்.
இதிலுள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, சருமத்தை மிருதுவாகவும் நீரேற்றத்துடனும் வைக்க உதவுகின்றன. பீட்டா கரோட்டின், சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர் வீச்சுக்களால் சரும செல்கள் அடையும் சிதைவிலிருந்து அவற்றைக் காப்பாற்றுகின்றன.
இந்தப் பழம் குறைந்த அளவு கலோரி கொண்டது. மேலும், இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள் நீண்ட நேரம் வயிற்றில் தங்கி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.