சென்னை: நடைமுறைக்கு வந்துள்ளது… தமிழ்நாட்டில் 90 சதவீத ரேசன் கடைகளில் கருவிழி பதிவு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக உணவுப்பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சில பல சிக்கல் ஏற்பட்ட காரணத்தால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் சில நேரங்களில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்ட பிறகு, முன்பிருந்த பேப்பர் குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதுடன் தேவையற்ற சிக்கல் உருவாகிறது. விரல் ரேகை மின்னணு பதிவேட்டிற்கு பதிலாக ரேஷன் பொருட்களை கருவிழி பதிவு மூலம் பெறும் முறை தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி 90% ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படும் எனவும் உணவுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.