சென்னை: நடிகர் விஜய்யை முதல்வராகக் காட்சிப்படுத்திய போஸ்டர் சர்ச்சையைச் சந்தித்து வருகிறது. இதனால் இது தணிக்கை துறையில் சிக்கிக் கொள்ளும் என்று தெரிகிறது.
இயக்குநர் எம். கோபி இயக்கத்தில் நடிகர்கள் அப்புக்குட்டி, தினேஷ், தம்பி ராமையா நடிப்பில் உருவான திரைப்படம் யாதும் அறியான். ஹாரர் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒளிப்பதிவும் வசனமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளன.
அதேநேரம் டிரைலரில், “தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புது திட்டங்கள்: முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு” என்கிற நாளிதழ் போஸ்டர் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இதை விமர்சித்து வருகின்றனர்.
இதனால், டிரைலரில் இடம்பெற்ற போஸ்டர் தணிக்கைக் குழுவால் அனுமதிக்கப்படுமா இல்லை நீக்கப்படுமா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.