டெல்லி: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மார்ச் 1, 2027 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வழக்கமாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில், 2027-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சில எம்.பி.க்கள் மக்களவையில் கேள்விகள் கேட்டிருந்தனர். அதற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று எழுத்துப்பூர்வ பதில் அளித்திருந்தார்.

அதில், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தும் ஜூன் 16 தேதியிட்ட அரசு வர்த்தமானி வெளியிடப்பட்டதன் மூலம் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக, 3 மற்றும் 4-ம் தேதிகளில் டெல்லியில் 2 நாள் மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளின் இயக்குநர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்று அவர் பதிலளித்தார்.