சென்னை: ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருக்கும் தங்களுடைய முகம் பளபளப்பாக பருக்கள் ஏதுமின்றி பிரகாசிக்க வேண்டும் என்பதே ஆசை. ஆனால் பலரும் இதற்காக பல இரசாயன வகைகள் கலந்த கிரீம் வகைகளை பயன்படுத்தி உண்மையான தங்களுடைய இயற்கையான முகப் பொலிவுகளையும் கெடுத்து விடுகின்றனர்.
அடிக்கடி முகத்தில் கை வைக்க கூடாது. ஏனெனில் நம்முடைய கைகளில் இருக்கும் கிருமிகள் முகத்தில் இருக்கும் நுண் துளைகளினூடாக உட்சென்று முகத்தில் பருக்கள் போடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
ஏற்கனவே முகத்தில் பருக்கள் உள்ளவர்கள் அந்த பருக்களை கிள்ளி விடக் கூடாது. தினமும் தூங்கும் சுத்தமான தலையணை, படுக்கை விரிப்புக்களைப் பயன்படுத்துவது நன்று. ஏனெனில் நீண்ட நேரம் உறங்குவதால் பொடுகு, எண்ணெய் சருமத்தின் நுண் துவாரங்கள் ஊடாக உள்ளே செல்வதால் சருமப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.
முகத்தினை அடிக்கடி கழுவுவதை தவிர்க்கவும். இயன்றவரை ஒரு நாளில் இரண்டு தடவைகள் கழுவுவது சிறந்தது. அழகு சாதனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்த்தல் சிறந்தது.
குறிப்பாக தூங்கும் போது முகத்திற்கு எந்தவொரு அழகு சாதன இரசாயன பதார்த்தங்களை பயன்படுத்தாமல் முகத்தை நன்றாக இதமான தூய நீரினால் கழுவி விட்டு தூங்குதல் சருமத்திற்கு கூடுதல் பொலிவை தரும்.
உடல் எப்பொழுதும் குளிர்மையாக வைத்திருப்பதன் மூலம் முகம் பளபளப்பு மற்றும் பொலிவினைத் தரும். உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு அடிக்கடி நீர் அருந்துதல் சிறப்பான வழியாகும். தண்ணீர் அடிக்கடி குடிக்க முடியாதவர்கள் மற்றும் விரும்பாதவர்கள் நெல்லிக்காய் யூஸ், மாதுளை யூஸ் போன்ற பழங்களின் சாறு மற்றும் பான வகைகளை அருந்துவது சருமத்திற்கு பொலிவு மற்றும் ஆரோக்கியத்தை தரும்.
சிலர் எண்ணெய் நிறைந்த உணவு வகைகள், மற்றும் உடனடி உணவுகள் போன்றவற்றை அடிக்கடி உண்பதால் முகத்தில் அதிகமாக பருக்கள் ஏற்படும். எனவே இயலுமானவரை நார்ச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுதல் நன்று.