பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ஆட்டிறைச்சி மற்றும் நாய் இறைச்சி வினியோகிக்கப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி நேற்று கர்நாடகாவில் உள்ள மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பெங்களூரு ஓட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் ஆட்டிறைச்சி சப்ளை செய்யப்படுகிறது. அதில் நாய் இறைச்சியும் கலந்து பெங்களூரில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றார்.
இதையடுத்து, கர்நாடக உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் ராஜஸ்தானில் இருந்து பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்துக்கு வந்த 90 பார்சல்களை ஆய்வுக்காக ஆய்வகத்துக்கு இன்று அனுப்பி வைத்தனர். ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.